Entry: நெஞ்சு பொறுக்குதா பொறுக்குதில்லையா? Dec 19, 2003



தமிழக அரசு சார்பில் வருடா வருடம்
எட்டயபுரத்தில் நடைபெறும் பாரதியார் பிறந்த நாள் விழா
இந்த வருடம் அவர் பிறந்த நாளன்று நடைபெறாமல்
இரண்டு நாட்கள் தள்ளி நடைபெற்றது.
காரணம், அமைச்சர்களின் தேதி கிடைக்காததால்.
- செய்தி.


அம்மா ஐதராபாதிலிருக்கும் போதாவது அமைச்சர்கள் நிம்மதியாய் இங்கு கடமை ஆற்றுவார்கள் என்று யாரேனும் கருதியிருந்தால் அவர்களை அம்மாவின் தாயுள்ளம் கூட மன்னிக்காது. அதெப்படி முடியும்? ஜூனியர் விகடனும் ரிப்போர்ட்டரும், "ஐதராபாதிலிருந்து அம்மா திரும்பியதும் அதிரடி அமைச்சரவை மாற்றம்" என்று ஆரூடம் சொல்லி அவர்களின் வயிற்றில் புளிக்கரைசலைப் பாய்ச்சும்போது பாரதியார் என்றால், "யார் பாரதி?" என்று தான் கேட்பார்கள். (இருந்தாலும் முன்னாள் அமைச்சர் ஆவதற்கு இப்படி பயப்பட வேண்டியதில்லை என்பதே உண்மை. பத்தோடு பதினொன்றாய், மன்னிக்கவும், நூறோடு நூற்றி ஒன்றாய் இருந்து விட்டுப் போக வேன்டியது தானே.. சில பேர் மூன்றாவது தடவையாக முன்னாள் அமைச்சர் ஆகிக் கொன்டிருக்கும் காலம் இது..!! மற்றவர்கள், "வெற்றிகரமான நூறாவது நாள் - அமைச்சராக நான்" என்று போஸ்டர் ஒட்டிக் கொண்டாடாத குறை..!!)

பேசாமல் ஒன்று செய்யலாம். அந்தத் தலைவரின் பிறந்த நாள், இந்தக் கவிஞரின் நினைவு நாள் என்று அமைச்சர்களை அடிக்கடி தொந்தரவு செய்வதற்குப் பதில், "ஒரு மாத சிறப்பு முகாம்" ஒன்றை முதுமலை மாதிரி இடத்தில் ஏற்பாடு செய்து, அங்கே தலைவர்கள், கவிஞர்கள், எல்லோருக்கும் சேர்த்து வைத்து பிறந்த நாள், நினைவு நாள், எல்லாம் வரிசையாகக் கொண்டாடி தூள் கிளப்பி விடலாம். அமைச்சர்களுக்கு நாலு இடத்திற்குப் போய் வந்த வகையில் கொஞ்சம் பொழுதாவது போகும்.

   0 comments

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments